Saturday, August 28, 2010
சட்டக்கல்லூரி மாணவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர தாக்குதலும், சென்னையை ஸ்தம்பிக்க வைத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டமும் .
அசோக்குமாரை தாக்கிய காவல்துறை
17.08.2010 செவ்வாய் கிழமை அன்று சென்னை சட்ட க்கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர் அசோக் குமார் செங்கல்பட்டு அருகே உள்ள திருக்களுக்குன்றம் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்களால் கொடுரமாக தாக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவர் 'தமிழக மக்கள் உரிமை கழகத்தின்' காஞ்சிபுர மாவட்ட பொறுப்பாளர் என்பதும் அவர் காவல் துறையின் அத்துமீறல்களை பலமுறை கண்டித்திருக்கிறார் என்பதும் காவல்துறை அந்த மாணவரை பலி வாங்க காத்திருந்தது என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் அடித்த அடியில் மேல்தாடையில் பல் உடைந்திருக்கிறது , உதடு கிழிந்திருக்கிறது , பாதத்தில் தோல் உரிந்திருக்கிறது , தலை, தொடை, கழுத்து, என உடம்பில் பல பாகாங்களில் காட்டுமிறாண்டிதனமாக தாக்கி உள்ளனர்.
சட்ட க்கல்லுரி மாணவர்கள் கொதிப்பு
மாணவர் காவல் துறையினரால் தாக்கப்பட்ட சம்பவமானது சென்னை சட்ட க்கல்லூரி மாணவர்களை கொதிக்க வைத்தது. அவர்கள் அந்த செய்தியை கேட்டவுடன் மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் . அதுவும் பாரிஸ் கார்னரில் இரண்டு இடங்களில் சாலையை மறித்ததால் வட சென்னை , தென்சென்னை ,மத்திய சென்னை என்று அனைத்து பகுதியிலும் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் சுமார் ஆறு மணி நேரம் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
மறியல் போராட்டத்தை கண்டு அஞ்சி நடுங்கிய காவல் துறை
சென்னையில் மிகவும் வாகன நெருக்கடி மிகுந்த இடம் பாரிஸ் கார்னர். இதில் உயர்நீதி மன்றம் , பிராட்வே என்ற இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் உட்பட்ட இரண்டு சாலைகளும் மறிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து சேவையே ஸ்தம்பிதது. பொதுமக்கள் அவதிக்கு உள்ளான போதும் காவல் துறை அம்மாணவர்களை கைது செய்யவோ , கலைந்து போகச்செய்யவோ இல்லை தேர்தல் நெருங்குவதால் இது மீண்டும் வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் போராட்டமாக மாறி விடுமோ என்ற பயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டு விட்டதை தான் இது காட்டுகிறது.
காவல் துறையின் மாறாத்தன்மை
இன்றைய காவல் துறையானது பிரிட்டிஷ் காவல்துறை எப்படி இருந்ததோ அப்படியே இம்மியும் மாறாமல் இன்றும் இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்திலாவது காவல்துறையில் லஞ்சம் என்பது இன்று உள்ளதை போல இல்லை. ஆனால் ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக வைத்து போற்றபடும் தமிழக காவல் துறை குற்ற வழக்குகளை கண்டு பிடிப்பதில் முதன்மை வகிகின்றதோ இல்லையோ, அதிகமாக லஞ்சம் வாங்குவதில் துறை ரீதியாக முதன்மை வகிக்கின்றது.
சட்டத்தை மதிக்காதவர்கள் யார்?
அமைச்சர்கள், சில பணக்கார பத்திரிகையாளர்கள் அடிக்கடி ஒரு வாசகத்தை கூறுவதுண்டு ‘வழக்கறிஞர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க கூடாது , அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்களே என்று சொல்வார்கள்’. இது எவ்வாறு முழுக்க முழுக்க பொய்யோ, அதை போலவே காவல் துறை சட்டப்படி தனது கடமையை ஆற்றுகிறது என்பதும். காவல் துறை மட்டுமல்ல நமது ஆட்சியாளர்களும் சட்டத்தையும், நீதிமன்றங்களையும் மதிப்பதில்லை என்பதே உண்மை ஆகும். உண்மையிலேயே அவர்கள் தான் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து கொண்டு தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். எந்த சட்டம் ஊழல் செய்யவும், கையாடல், மற்றும் இன்ன பிற முறைகேடுகளையும் செய்யச்சொல்கிறது என்று தெரியவில்லை. அது அவர்களுக்கே வெளிச்சம்.
மனித உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கும் காவல்துறை
காவல்துறைக்கு பல சட்ட வழி காட்டுதல்கள் உண்டு, மனித உரிமை ஆணையம் வகுத்திருக்கும் வழிமுறைகள், மற்றும் ‘டி.கே.பாசு - எதிர் - மேற்கு வங்காள அரசு’ என்ற வழக்கில் தெளிவாக வரையறுத்துள்ள வழிமுறைகளையோ காவல் துறை அதிகாரிகள் மதிப்பதும் இல்லை, கிஞ்சித்தும் பின்பற்றுவதும் இல்லை. அவர்களுக்கு தைரியம் கொடுப்பவர்கள் எல்லாம் அரசியல் கட்சியினர் தான் ஏனெனில் எந்த அரசுமே ஆட்சியை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்த முழுக்க, முழுக்க நம்பி இருப்பது காவல் துறையை தான்.
கள்ளக்கூட்டு போடும் காவல்துறை
அரசு என்பது ஒடுக்கு முறை கருவி எனும் போது அது அதன் பிரதிநிதியாக வைத்திருப்பது காவல் துறையை தான். இந்த சம்பவத்திற்கு எந்த அரசியல் கட்சியுமே காவல் துறையை கண்டிக்க வில்லை. ஏன் என்றால் இவர்களோடு கூட்டு சேர்ந்து கட்டை பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பதே இவர்களின் இப்போதைய முக்கியமான தோழில். அத்தோடு இவர்கள் செய்யும் அனைத்து குற்றவியல் வேலைகளுக்கும் காவல் துறையின் ஆசியும், பங்கும் அவசியம் தேவை. இதை பொது மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்களானால் இவர்கள் தேர்தலின் போது ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லவே முடியாது. மக்களை இவர்கள் பல வழிகளிலும் தாங்கள் தான் மக்களுக்கு உண்மையான எதிரி என்பது தெரியாமல் திசை திருப்பி வைத்துள்ளனர்.
வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!
வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே காவல் துறையினரால் கண்மூடி தனமாக தாக்கப்பட்டனர், நீதி மன்ற வளாகங்களும் , வாகனங்களும் , கண் முடி தனமாக அடித்து நொறுக்க பட்டது, நீதிபதிகளும் தாக்கப்பட்ட ஒரு மிக கேவலமான சம்பவம் நடைபெற்றது. ஆனாலும் ஆட்சியாளர்கள் ஒரு போதும் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட வேலை நீக்க பரிந்துரையையும், அரசு செய்யாமல் உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்து காவல் துறையினரை பாதுகாக்கும் பணியை செய்துள்ளது. இது போலவே அரசு தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நீதிமன்ற உத்தரவுகளை கிள்ளு கீரையாக மதிக்கும் நிலை வேறு எந்த நாட்டிலும் இல்லை எனலாம்.
காவல்துறை யாருக்கு நண்பன் ?
இன்றைய காவல் நிலையங்கள் பெரும்பான்மையானவை பணம் காட்சி மரங்கலாகவே இருக்கின்றன. புகார் கொடுப்பவரிடம் இருந்தும் , யார் மீது புகார் அளிக்க பட்டதோ அவர்களிடம் இருந்தும், பணத்தை கறந்து கொண்டு இருவரையும் மிரட்டி அனுப்பும் வேலையை தான் இன்றைய காவல் துறை செய்து கொண்டு இருக்கிறது . காவல் துறை மக்களின் நண்பன் என்று சொல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். இது எப்போதும் நியாயமான போராட்டங்களை ஒடுக்கும் வேலையை தான் செய்து வருகிறது மனித உரிமை , அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிபடை உரிமை, என்று எந்த உரிமையையும் சாதாரண மக்களுக்கு வழங்காமல் தங்களிடம் சிக்குபவர்களை சிதறு தேங்காய் போடும் வேலையை கண கச்சிதமாக செய்து வருகிறது நமது காவல் துறை. நமது ஆட்சியாளர்களுக்கு அது ஒரு ஏவல் துறை ஆகும். தாங்கள் வைத்தது தான் சட்டம், எங்களால் எதையும் செய்ய முடியும், நிரபராதியை குற்றவாளியாக்க முடியும், குற்றம் செய்தவனை காக்கவும் முடியும். ஒருவனை ரவுடி என்று என்கவுண்டர் செய்யவும் முடியும் கொலை குற்றம் செய்தவனுக்கு பாதுகாவல் வேலையும் செய்ய முடியும் என்று தலை கொளுத்து காவல் துறை ஆடுகிறது. கஸ்டடி மரணங்கள் பல நடந்தும் அவை பல மறைக்கப்பட்டும் , சில அர்.டி.ஒ விசாரணையில் தூங்குவதும், நமது நாட்டில் வழக்கமான ஒன்றாகி விட்டது என்றே சொல்லலாம். அதை எதிர்த்து கேட்பதும் , நியாயம் கிடைக்க போராடுவதும் , அந்த போராட்டங்கள் சட்ட விரோதமாக நசுக்கபடுவதும் தான் இன்று நடைபெற்று வருகிறது. நமது சட்ட கல்லூரி மாணவர்கள் அந்த நடைமுறைக்கு தங்களின் நேர்மையான போராட்டம் மூலம் ஒரு முற்று புள்ளி வைத்து உள்ளனர்.
கருத்துரிமைக்கு சாவு மணி அடிக்கும் காவல்துறை!
இன்று காவல் தூறையினர் அரங்க கூட்டங்களுக்கே காவல் தூறையின் அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வந்து எந்த ஒரு கருத்தும் அரசுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ எதிராக திரும்ப கூடாது என்பதில் கவனமாக கருத்துரிமை பறிக்கும் வேலையை செய்து வருகின்றது. போராட்டம் நடத்த வேண்டும் என்றால் மனிதர்களே இல்லாத இடமாக பார்த்து கண்டன ஆர்பாட்டம் நடத்த அதுவும் பலகட்ட போரட்டங்களுக்கு பிறகே அனுமதி கிடைக்கின்றது.
மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர்!
அந்த நிலையில் தான் மாணவர்கள் போராட்டம் யாரையும் சார்ந்திராமல் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது . இது சட்ட கல்லுரி வரலாற்றிலே பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய செய்தி ஆகும். சட்ட கல்லுரி மாணவர்கள் 2008 ஆண்டில் மாணவர்களுக்குள்ளேயே இரு பிரிவாக பிரிந்து அடித்து கொண்டது பொது மக்களுக்கு அவர்கள் மீது இருந்த மரியாதையை இழக்கும் விதமாக இருந்தது. அத்தோடு இரு வருடங்களாக எந்த வித போராட்டமும் செய்யாமல் மாணவர்கள் முடங்கி கிடந்தனர் என்றே சொல்லலாம். இந்த போராட்டத்தின் மூலம் சக மாணவன் காவல் துறையை சேர்ந்தவர்களால் கண்முடித்தனமாக தாக்கப்பட்ட போது கொதித்தெழுந்து ஆளும் அரசுக்கு எதிராக அந்த சட்ட விரோத காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வைத்திருப்பது என்பது சாதரான செய்தி அல்ல. ஏன் என்றால் இது போலவே பல முறை மாணவர்கள் காவல் துறையின் அத்து மீறலுக்கு எதிராக கலம் இறங்கி போராடி எந்த விதமான தீர்வும் கிடைக்காமல் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டி இருந்தது.
நீதிமன்ற உத்தரவு
இந்த போராட்டத்தில் இறுதியாக சட்ட கல்லூரி மாணவர்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டவுடன் அந்நீதிமன்றம் உடனே காஞ்சிபுர மாவட்ட காவல் துறை உயர் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்தது அத்தோடு திருக்களுக்குன்றம் காவல் நிலைய அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது. அத்தோடு அம்மாணவரை உடனடியாக பெற்றோர் பார்க்கவும் , அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டது.
துருவ நட்சத்திரங்கள்
மாணவர்கள் என்பவர்கள் வருங்காலத்தை தீர்மானிக்க போகும் பாரதத்தின் விலை மதிக்க முடியாத வைரங்கள். இன்று அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி என்பது அவர்கள் தேர்விலே வெற்றி பெற மட்டுமே உதவகூடியதாகவும் , வாழ்க்கை தேர்வில் தேரமுடியாதவர்களாகவும் ஆக்குகிறது. அகத்தேர்வு முறையானது மாணவர்கள் முதுகெலும்பை முறிப்பதாகவும், அவர்களின் போராட்ட குணத்திற்கு சவால் விடுவதாக்கவுமே உள்ளது. அந்த நிலையை தகர்த்து இலங்கை தமிழர் பிரச்சனை , நாட்டில் நடக்கும் அநீதியை தட்டி கேட்பதாகட்டும் , காவல் துரையின் அராஜக போக்கை கண்டிபதகட்டும் எதிலுமே எப்போதும் முதல் இடத்தில் இருப்பவர்களும் , முதலில் குரல் கொடுப்பவர்களாக இருப்பவர்களும் சட்ட கல்லுரி மாணவர்களே.
புறக்கணித்த செய்தி நிறுவனங்கள்
சட்ட கல்லுரி மாணவர்கள் இந்த ஆளும் சந்தர்ப்பவாத, அடக்குமுறையை கட்டவிழித்து விட்டிருக்கும் மக்கள் விரோத அரசுக்கு எதிராக 6 மணி நேர மறியல் போராட்டம் என்பது நடைமுறையில் சாத்திய படாத ஓன்று. அத்தோடு மற்ற சட்ட கல்லூரிகளான சேலம், மதுரை, திருச்சி, செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர்களையும் திரண்டெழுந்து போராட வைத்தது. அதை போலவே ஒவ்வொரு கல்லூரியிலும் போராட்டம் பரவி விடும் என்ற நோக்கத்தில் தான் எந்த மீடியாவும் இந்த செய்தியை முக்கிய செய்தியாக வெளிவிடவில்லை. அதுவும் சில மீடியாக்கள் அந்த உண்மையை திரித்தும் , புரட்டியுமே அரைகுறை செய்தியை வெளியிட்டன. இதில் இருந்தே அனைத்து செய்தி நிறுவனங்களும் அரசாங்கத்தின் விரல் அசைப்பில் ஆடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். மாணவர்களின் நேர்மையான போராட்டமானது எந்த அடக்கு முறை கருவிக்கும் கட்டுப்பட்டதல்ல என்பதே வரலாறு காட்டும் உண்மை. அகவே தான் மாணவர்கள் அரசின் அடக்குமுறையை உடைத்து எரிந்து மாணவர் சக்தி எழுந்தால் அது எந்த அரசையும் ஆட்டுவிக்கும் சக்தி கொண்டது என்பதையும், மாணவர்கள் அச்ச மற்றவர்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டது.
மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்
போராட்டம் என்பது நாமே வலிந்து ஏற்பதல்ல, அது நம் மீது வன்முறையாக திணிக்கபடுகிறது. அதை போலவே போராட்ட வடிவமும் சந்தர்ப்பத்தை பொறுத்து மாறுகிறது. அதுவும் இளம் மாணவர்கள் போராட்டமானது எந்த வலிமை மிக்க அரசாங்கதையும் ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டது என்பது ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கிய ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை போலவே இதுவும் காவல் துறை அத்துமீறல்களுக்கு எதிராக வலிமையான மாணவர்கள் போராட்டமாக மாற வேண்டும் . அப்போது தான் காவல் துறை லத்தியை ஓங்கும் போது கொஞ்சம் புத்தியையும் தீட்டும். எந்த சமூகத்தில் மாணவர்கள் எழுச்சி மிக்கவர்களாகவும், அநீதி எங்கு நடந்தாலும் தட்டி கேட்கின்றனரோ, அந்த சமூகமே ஒரு நல்ல விழிப்புணர்வு நிரம்பிய சமூகமாக இருக்கும். நமது மாணவர்கள் அதை போராட்டங்கள் மூலம் கண்டிப்பாக சாதிப்பார்கள்.
உமாசங்கருக்கு ஆதரவாக எழும்பும் குரல்கள் அனைத்தும் ஓன்று திரண்டு ஊழலுக்கு எதிரான இயக்கமாக மலர வேண்டும்.

கருணாநிதியின் ஆட்சியின் ஊழல்களை திரை கிழித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பணி இடைநீக்கத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம்.
உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள்
சாதாரண உழைக்கும் மக்கள் பாதிக்கப்படும் போதும், இலங்கை தமிழர்கள் கொடூரமாக பேரினவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட போதும், அது காவிரி நீர் பிரச்னையாக இருந்தாலும் , சாதாரண மக்களின் உரிமைகளை பறிக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும் , காவல் துறை அராஜகமாக செயல்பட்ட போதும், ஜனநாயகத்தை பாதுகாக்க எழும்பும் முதல் கண்டன குரல் வழக்கறிஞர்களின் குரலாகத்தான் இருக்கும். வழக்கறிஞர்களுக்கு காப்பு நிதி ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தபட வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் நீண்ட காலக்கோரிக்கை. அதற்காக திரைதுறையினரை போலவோ, மற்ற அரசு துறைகளை போலவோ முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தியோ , கோரிக்கை மனு கொடுத்தோ தங்கள் காரியத்தை வழக்கறிஞர்கள் ஒரு போதும் சாதித்து கொண்டதில்லை, அந்த தார்மிக முதுகெலும்பு தான் இன்றும் கொஞ்சமாவது ஏழைகள் நீதிமன்றம் சென்று நீதி பெற முடிகிறது என்றால் அதற்கு காரணமாக இருக்கிறது. இன்று தீங்கியல் சட்டம் என்று ஒரு சட்டம் தொகுக்கப்பட்ட முந்தய வழக்குகளை கொண்டுள்ளது அதற்கும், அது போல பல மக்கள் நலச்சட்டங்கள் உருவாக காரணமாகவும் , மனித உரிமை எங்கு மீறப்பட்டாலும் அதற்கு ஆதரவாகவும் , ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதிலும், சமூகம் சீர்திருத்த படவேண்டும் என்பதில் அக்கறையும் , பொது நல வழக்குகள் மூலம் அரசின் தவறான போக்குகளை நீதிமன்றகளில் தட்டி கேட்கவும், பல ஊழல்களை வெளிக்கொணரவும், அரசின் தவறான கொள்கை முடிவை கொஞ்சமாவது தட்டி கேட்கவும் முடிகிறது என்றால் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூடிய சில வழக்கறிஞர்கள் உள்ளதால் தான், இன்று பணம் இல்லாதவர்களும் கூட தைரியமாக நீதிமன்ற படிக்கட்டுகளை நீதி கேட்டு மிதிக்க முடிகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதை போல தான் எல்காட் ஊழல், கல்குவாரி ஊழல், கப்பல் கம்பனி ஊழல், சுமங்கலி கேபிள் விசன் மூலம் அரசு கேபிளுக்கு 300 கோடி நஷ்டம் போன்றவற்றை வெளிக்கொணர்ந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளையை சேர்ந்த வழக்கறிஞர்களால் 27.08.2010 அன்று மாலை 4 மணிக்கு மெமோரியல் ஹாலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான வழக்கறிஞர்களும், வர்க்க உணர்வு பெற்ற தோழர்களும், பல்வேறு அமைப்பை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் சுரேஷ், சங்கரசுப்பு, புகழேந்தி, பார்த்தசாரதி, மீனாட்சி, மக்கள் கலை இலக்கியக் கலகத்தை சேர்ந்த வெங்கடேசன், மற்றும் புதிய ஜனநாயக முன்னனியை சேர்ந்த முகிலன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் சிதையாமல் உமாசங்கரை பணி இடைநீக்கம் செய்த கருணாநிதியை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர். ஒரு வர்க்க உணர்வு பெற்ற ஜனநாகய சக்திகளின் கூட்டம் எவ்வாறு நேர்த்தியாகவும், உணர்ச்சிப் மேலோங்க இருக்குமோ அதை போல இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் துறை நண்பர்களை கூட கூர்ந்து உண்மையை கேட்க வைக்கும் படி இருந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல.
நேர்மையும் நெஞ்சுரமும் நிரம்பிய அதிகாரி உமாசங்கர்
உமாசங்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து தனது அயராத உழைப்பின் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்று பல இளைஞர்களின் வழிகாட்டியாக உள்ளவர். மதுரை மாவட்டத்தில் பணி புரிந்த போது சுடுகாட்டு கூரை ஊழலை அம்பலப்படுத்தியதோடு அதற்கு காரணமான ஜெயலலிதா மற்றும் இப்போது தி.மு.காவில் ஐக்கியம் ஆகியுள்ள பல முன்னாள் அதி.மு.க. அமைச்சர்கள் மேல் ஊழல் வழக்கு போடக் காரணமாக இருந்தவர். அதை தொடர்ந்து பல துறைகளிலும் அப்போது நடந்த ஊழல் வரிசையாக அம்பலமாகியது அதன் காரணமாக ஜெயலலிதாவிற்கு எதிராக மக்கள் அலை ஏற்பட்டது, அந்த வெறுப்பை எதிர் கட்சியாக இருந்த தி.மு.க.நன்கு பயன்படுத்தி கொண்டு அப்போது நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்தது. இவர் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த போது இந்தியாவிலையே முதன் முதலாக மின்னனு நிர்வாகத்தை புகுத்தியவர். அப்போது கொள்ளை அடித்து கொண்டிருந்த மைக்ரோ சாப்ட்வேருக்கு பதிலாக இலவசமாக கிடைக்கும் மென்பொருளான லீனக்ஸ் என்ற இலவச மென்பொருளை தமிழக அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் புகுத்தியதன் மூலம் அரசுக்கு விரயமாகி வந்த ரூ.500 கோடியை மிட்சபடுத்தியவர். மேலும் திருவாரூர் கடற்கரை பகுதியில் விவசாயத்தை நாசமாக்கி வந்த மிகப்பெரிய பணமுதலைகளின் இறால் பண்ணை குட்டைகளை நேரடியாக வெட்டி அப்புரப்படுத்தியவர். எல்காட் சேர்மனாக இருந்த பொழுது முதல்வரின் துணைவியார் பரிந்துரை செய்த நபருக்கு டெண்டரை வழங்க மறுத்தவர், அவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் கூடுதல் இயக்குனராக இருந்த போது கல் குவாரி ஊழல் , சவுத் இந்தியா சிப்பிங் கார்பரேசன் தனியார் மயமாக்கல் ஊழல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழல் , போன்ற பல பெரிய ஊழல் திமிகலங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். ஆனால் அவை அனைத்துமே ஊழல்வாதிகளை ஆதரிக்கும் கருணாநிதியால் கிடப்பில் போடப்பட்டு , பல ஊழல் குற்றசாட்டுகள் உள்ள மாலதி ஊழல் தடுப்புதுரையின் இயக்குனராக நியமிக்கப்பட்ட அவலம் இங்கு அரங்கேறியது. மேலும் எல்காட் மூலம் உருவான ரூ.700 கோடி மதிப்பிலான சொத்துக்களை மாயமானது, அந்த முறைகேடு செய்த ஆவணகளை அவர் தேடிக்கொண்டிருந்த போதே பணி மாற்றம் செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அரசு கேபிள் டிவி கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது எந்த கருணாநிதி அதை தடுப்பதற்காக போராடினாரோ, அதே கருணாநிதி தனது குடும்பத்திற்குள் ஏற்பட்ட பங்காளி சண்டையில் மாறன் சகோதரர்களை பலி வாங்க திரும்பவும் அரசு கேபிளை கொண்டு வந்தார். ஆனால் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் கோலோச்சி வரும் சுமங்கலி கேபிள் விசனோ அரசு கேபிள் டிவியை ஒழித்து கட்டும் நோக்கத்தோடு அதன் செயல்பாடுகளுக்கு பல முட்டு கட்டைகளை போட்டது. அரசு கேபிள் டிவி அப்ரேட்டர்கள் மிரட்டப்பட்டார்கள் , ரவுடிகளை வைத்து கேபிள் வொயர்களை அறுத்து எரிந்து நாசம் செய்தது, இது போன்ற பல குற்றவியல் செயல்களை அரசு கேபிள் டிவிக்கு எதிராக செய்து வரும் எஸ்.கே.வியை நாட்டுமை ஆக்க வேண்டும் , அந்த நிறுவனத்தின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பல பரிந்துரைகளை செய்தார் நிர்வாக இயக்குனராக இருந்த உமாசங்கர். ஆனால் கருணாநிதி குடும்பம் திடிரென பணமாற்றத்தால் ஓன்று சேர்ந்ததை தொடர்ந்து நடவடிக்கை மாறன் சகோதரர்கள் மீது பாயாமல் அதற்கு பரிந்துரை செய்த உமாசங்கர் மீது பாய்கிறது, உமாசங்கர் சிறுசேமிப்பு துறைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார்.
உமாசங்கர் எப்போதும் ஊழலுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்
உமாசங்கரை போலவே கருணாநிதி ஆட்சி காலத்திலும், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் பல ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பந்தாடபட்டுள்ளனர், ஆனால் அவர்கள் ஒரு கட்சிக்கு அதரவாக செயல்பட்டனர், அதன் மூலம் பல கோடி சொத்துகளுக்கு அதிபதிகளாக இருக்கின்றனர், அவர்கள் தங்கள் சொந்த சுயலாபத்திற்க்காகவே அவ்வாறு ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல் பட்டனர் என்பது வெளிப்படையான உண்மை, அது அனைவருக்கும் தெரிந்த ஓன்று. ஆனால் ஒரு நேர்மையான அதிகாரி தனது பணியை நேர்மையாக செய்ததோடு , ஆளும் கட்சியின் குடும்ப சிபாரிசுகளை புறக்கணித்தார் என்பதும், அத்தோடு அமைச்சர்கள், அதிகாரிகள், கருணாநிதியின் குடும்ப உறுபினர்களின் ஊழல்களை அம்பலப்படுதினார் என்பதால் அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டை வைத்து பணி இடைநீக்கம் செய்ய பார்த்தது தமிழக அரசு. ஆனால் அது செல்லுபடியாகாமல் போகவே அவர் சாதிச்சன்றிதலை போலியாக தந்தார் என்ற ஒரு சொத்தை காரணத்தை வைத்து அவரை பணி இடை நீக்கம் செய்து தனது வெஞ்சினத்தை தனித்து கொண்டுஇருக்கிறார் கருணாநிதி. அவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இதே தமிழகத்தில் தான் பணி புரிந்து வருகிறார் அப்போது எல்லாம் அவர் மீது இது போன்ற எந்த குற்றச்சாட்டும் வைக்கப் படவில்லை, எந்த காரணமும் கிடைக்காததால் கடைசி அஸ்திரமாக போலியாக அரசு இதை எடுத்துள்ளது. இதன் மூலம் அவர் உணர்த்த நினைப்பது என்னவென்றால் தன்னையோ, தனது குடும்ப உறுப்பினர்களையோ, தனது ஊழல் செய்யும் அமைச்சர்களையோ, தனக்கு ஊழலில் உதவி புரியும் அதிகாரிகளையோ எதுவும் செய்ய முடியாது , அவ்வாறு அநியாயத்தை தட்டி கேட்பவர்களுக்கு, அவ்வாறு தட்டி கேட்பவர் மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருந்தாலும் கூட அவர்கள் மேல் ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைத்து அவர்களை ஒரே நிமிடத்தில் பதவி நீக்கம் செய்ய தன்னால் முடியும் என்று நினைத்தார் கருணாநிதி. ஆனால் குழவி கூட்டுக்குள் கைவிட்டதை போல இப்போது தமிழகமெங்கும் “ஊழலுக்கு எதிராக செயல் பட்டவரை இப்படி அநியாயமாக பதவி நீக்கம் செய்து விட்டாயே” என்று மனித உரிமை அமைப்புகளும், மாணவர்களும், வழக்கறிஞர்களும், தினம் தோறும் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முலம் தனது ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சும் நிலை இன்று தமிழகத்தில் உருவாகி உள்ளது. கருணாநிதி இதை எல்லாம் முன் கூட்டியே சிந்திக்க கூடியவர் தான். அவர் போட்ட கணக்கு என்னவென்றால் உமாசங்கர் கருணாநிதியின் ஆட்சியில் நடந்த ஊழலை மட்டுமல்ல ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்த ஊழலையும் தான் அம்பலப்படுத்தினார். மதுரை மாவட்டதில் உதவி ஆட்சியராக இருந்த போது சுடுகாட்டு கூரை வாங்கியதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார் அதை தொடர்ந்து, ஊழல் குற்றசாட்டுகள் வரிசையாக பல துறைகளிலும் வெளிவந்தது. அதனால் ஜெயலலிதாவிற்கு உமாசங்கர் மீது வெறுப்பு உண்டு, இப்போது அதி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யுனிஸ்டுகள், மற்றும் வை.கோ. போன்றோர் உமசங்கருக்கு ஆதரவாக களம் இறங்க மாட்டார்கள், என்ற காரணத்தால் தைரியமாக தன்னை எதிர்த்து கேட்க யாரும் இல்லை என்று ஒரு உளுத்து போன குற்றச்சாட்டை உமாசங்கர் மீது வைத்தது ஆளும் தமிழக அரசு. உமாசங்கருக்கு ஆதரவாக ஜெயலலிதா குரல் கொடுத்தது இதில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஆகும். அத்தோடு உமாசங்கருக்கு ஆதரவாக பல பொதுநல அமைப்புகளும், உண்மையான ஜனநாயகத்திற்காக போராடும் பல பொதுவுடமை அமைப்புகளும் தமிழகத்தில் பல பகுதிகளிலும் பல கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டங்களையும், கருத்தரங்களையும் , தெருமுனை போராட்டங்களையும் , தொடர்ந்து செய்து வருகின்றனர். சில பெரிய எதிர் கட்சிகளும் தாங்கள் போகும் இடங்களில் எல்லாம் இதை தங்கள் அரசியல் அதாயத்திர்க்காகவே இருந்தாலும் கூட தொடர்ந்து இதை கண்டித்து குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகமெங்கும் எதாவது ஒரு அமைப்பு இதை கண்டித்து சுவரொட்டி ஒட்டியுள்ளதை நாம் சாதரணமாக எங்கும் காணலாம். தினசரி பத்திரிகைகளில் ஒரு செய்தியாவது எதாவது ‘ஒரு அமைப்பு கருணாநிதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்’ என்ற செய்தி வருகிறது என்றால் மிகை அல்ல. உமாசங்கர் தனிப்பட்ட முறையில் கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவிர்க்கோ எதிரானவர் அல்ல மொத்தத்தில் அவர் ஊழலுக்கு எதிரானவராக தான் இருந்துள்ளார். யார் தவறு செய்தாலும் ஒரு கடமை தவறாத அதிகாரி என்ன செய்ய வேண்டுமோ அதை தான் அவர் செய்துள்ளார்.
வரலாற்றுக்கடமை
சாதாரண மக்களின் ஆதரவு யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காது ஆனால் ஒரு நேர்மையான அதிகாரி அவர் அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களின் ஊழலை அம்பலப்படுத்தினார் என்ற காரணத்திற்க்காக, மக்கள் அவரை ஊழலுக்கு எதிரானவராக வராது வந்த மாமணியாக பார்கின்றனர். இது ஒரு தனி நபர் சம்பந்த ப்பட்ட விவகாரம் கிடையாது, யாருமே எதுவும் தட்டி கேட்க முடியாது என்று, தான் தோன்றிதனமாக செயல்பட்டுகொண்டிருக்க கூடிய சகல அதிகாரங்களையும் கைகளில் வைத்துள்ளவர்களுக்கு எதிராக ஒற்றை ஆளாக குரல் கொடுத்துள்ளார். இங்கு உண்மையான ஜனநாயகம் உயிர் பெற உழைத்து கொண்டிருக்கும் நாம் அனைவரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது நமது வரலாற்றுக்கடமையாகும். அவ்வாறு எழும் கண்டன குரல்கள் அனைத்துமே ஊழலுக்கு எதிரான குரல்கள் , எந்த உயர்ந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட வர்களுக்காகவும் இப்படி அனைத்து தரப்பட்ட மக்களிடம் இருந்தும் ஒரு சேர கண்டன குரல் எழுந்தது இல்லை. ஊழல் தான் இன்று பல மக்கள் ஒரு வேலை உணவு மட்டும் உண்டு, வானமே கூரையாகவும், எந்த விதமான சுகாதார வசதியும் இன்றி வாழக்காரணமாக உள்ளது. ஒருவன் ஆடம்பரமாகவும் ,சொகுசாகவும் வளமான வாழ்க்கை வாழவும், பலர் வறுமையில் வாடவுமான அவல வாழ்க்கை வாழத்தள்ளப்படுவதுமான வேறுபாடுகளுக்கு வழிவகுக்கிறது . ஒரு லிட்டர் பெட்ரோலில் மட்டும் ரூ.30 க்கும் மேலே விற்பனை வரியாக வசூல் செயப்படுகிறது மக்களின் அத்தியாவசிய தேவைக்குரிய பொருள்கள் மேல் வரி அதிகமாக விதிக்கப்படுவதும், ஆடம்பரமான பொருள்களுக்கு வரி சலுகை காட்டப்படுவதும் , செலவு அதிகமாகும் என்பதால் கல்வியை தனியாரிடம் தள்ளி விட்டு விட்டு டாஸ்மாக் சரக்கின் மூலம் இன்று பல இளைஞர்களை குடிபோதைக்கு அடிமையாக்கி, இலக்கு வைத்து வியாபாரம் செய்தும் மக்களிடமிருந்து அநியாயமாக பிடுங்கப்படும் வரிப்பணத்தில் தான் இந்த அரசு நடைபெறுகிறது. அப்படிபட்ட வரிபணத்தை எடுத்து தந்து பங்காளி சண்டையில் தனது எதிரியை பலி வாங்க ரூ.300 கோடியை எடுத்து ஒரு நிறுவனம் தொடங்குவதும், சமாதானம் ஏற்பட்டவுடன் அந்த நிறுவனத்தை இழுத்து மூடி விட்டு அந்த நிறுவனம் “அடக்கமாக செயல்படுகிறது” என்று சொல்வதுமாக, உலகத்தில் எங்குமே காண முடியாத அளவிற்கு ஒரு ஊழல் சாம்ராட்சியத்தின் அதிபதியாக இந்த அரசு செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. அது மட்டுமா இன்று அனைத்து பகுதிகளிலும் ஊழல் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது . இன்று ஒரு பாலம் போடுவது , சாலை போடுவது என்றால் அரசுக்கு சக்கரையாக இனிக்கிறது ஏன் என்றால் அதில் தான் கமிசன் பார்க்க முடியும் என்பதால், பொதுவிநியோக முறை , ஆவின் கூட்டுறவு சங்கம் , அரசு பள்ளிகளில் நடக்கும் ஊழல், குடிநீர் வாரியம் , மின்சார வாரியம் ,வீட்டு வசதி வாரியம் , தொழிலாளர் துறை , என்று அனைத்து துறைகளிலும் இன்று ஊழல் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. 100 சத விகித நிதியில் 40 சதவிகிதம் கூட மக்களுக்கு சென்று சேர்வதில்லை என்ற கொதிப்பு சாதாரண மக்களிடம் அதிகாரிகள் மீதும், அரசியல் வாதிகள் மீதும் நெருப்பாக கனன்று கொண்டு உள்ளது . ஐ.ஏ.எஸ்.போன்ற உயர் பதவிகள் கடினமான போட்டிதேர்வுகளை கொண்டது அதில் தேர்ச்சி பெறுவதே குதிரை கொம்பு என்ற சூழ்நிலையில் அதில் தேறி வருகின்ற பலரும் ஆரம்ப காலக்கட்டத்தில் நேர்மையாகத்தான் இருப்பார்கள். போகப்போக தங்களுக்கு கிடைக்கும் சொகுசான வாழ்க்கை , கவுரவம் , பதவி , அந்தஸ்து போன்றவற்றிக்கு அடிமையாகி நிரந்தரமாக எந்த ஊழலையும், சட்ட முறைகேடுகளையும் தட்டி கேட்கும் தையிரியமற்று ஊழல் செய்த காசில் பங்கு வாங்கி கொண்டும் முறைகேடுகளுக்கு துணைபோகியும் ஒரு சொகுசான வாழ்க்கையை வாழ்பவர்களாகவே மாறி போய் விடுகின்றனர். இதில் விதிவிலக்காக சிலர் இருக்கிறார்கள் என்ற ஒன்றே நாம் அவர்களுக்கு ஆதரவு கரம் கொடுக்க போதுமானதாகும்.
ஊழலுக்கு எதிரான போராட்டமாக மலர வேண்டும்
அந்தி பூத்தார் போல், குறிஞ்சி மலரை போல தான் சிலர் தங்களுக்கு கிழே நடக்கும் தவறுகளை தட்டி கேட்கவும், ஊழல்களை அம்பலபடுத்தவும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை நேர்மையாகவும், துணிச்சலாகவும், செய்யும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவராக இருப்பவர் திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.ஆவார். அவருக்கு ஆதரவாக நாம் குரல் கொடுப்பதோடு நமது பணி முடிந்து விடப்போவதில்லை. நம்மை சிறுக, சிறுக அழிக்கும் கரையான்களாக உள்ள , பலரின் பட்டினி சாவுக்கு காரணமான இந்த ஊழலை வேரோடும், வேறடி மண்ணோடும் அழித்து ஒழிக்கும் வரை நமது போராட்டங்கள் ஓயப்போவதில்லை. உமாசங்கருக்கு ஆதரவாக எழுந்த ஜனநாயக குரல்கள் நமது சமூகத்தின் அனைத்து குளறுபடிகளுக்கும் காரணமான ஊழலை , லஞ்சத்தை, அதிகார முறைகேடுகளை , சமூக சீர்ழிவுக்கு காரணமான மூலதானம் சிலரின் பிடியில் சிக்கி கிடப்பது என்ற அனைத்து சமூக சீர்கேடுகளுக்கும் எதிராக ஓன்று பட்டு குரல் கொடுப்போம்.
Saturday, August 21, 2010
மாற்றுக்கருத்தினை ஆதரிப்பீர்

உழைக்கும் மக்கள் அவர்களது எரியும் பிரச்சனைகளுக்கான அடிப்படைக்காரணம் ஆளும் முதலாளி வர்க்கமே என்பதை அறிந்து கொண்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களது கவனத்தை திசை திருப்பும் வகையிலையே அவை தங்களது நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்குகின்றன.
உழைக்கும் வர்க்க நலன் பேணும் அமைப்புகள் என்று தங்களை காட்டி கொள்பவையும் வர்க்க போராட்டபாதையை கைவிட்டு விட்டு ஒருபுறம் அப்பட்டமான நாடாளமன்றவாத அரசியலிலும் மறுபுறம் ஆளும் முதலாளி வர்க்கத்தை தெரிந்தோ, தெரியாமலோ மூடி மறைத்து காக்கும் தேசியவாத, ஜாதியவாத அரசியல் போக்குகளில் மூழ்கி போய்யுள்ளன. அந்த பிண்ணனியில் அவற்றின் ஊடகங்களும் உழைக்கும் வர்க்க செய்திகளையும், கருத்துக்களையும், திருபுகளின்றி முன்வைப்பதில்லை.
உழைக்கும் வர்க்க அரசியல் ஆளும் முதலாளி வர்க்க அரசியலிலிருந்து மாறுபட்டது மட்டுமல்ல, அந்த அரசியலிருந்து நேர் எதிரானதும் ஆகும். அந்த அடிப்படையில் எந்த வகை சமரசமும் இன்றி வர்க்கப் போராட்டப் பாதையையும் , பாட்டாளி வர்க்க சர்வதேச அணுகுமுறையையும் கடைபிடித்து உழைக்கும் வர்க்க நலன் ஒன்றையே முழுக்க முழுக்க மனதில் கொண்டு முதலாளி வர்க்க அரசியலுக்கு எதிரான கருத்துக்கள் அனைத்தையும் தாங்கி வரும் மாற்றுக்கருத்து இதழுக்கு சந்தா செலுத்தி உழைக்கும் வர்க்கத்தின் குரல் உரத்து ஒழிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தனி இதழ் : ரூ.10/-
ஒரு வருட சந்தா : ரூ.75/-
(அஞ்சல் செலவு உட்பட)
சந்தா விபரங்களுக்கு தொடர்ப்பு கொள்ள :-
மாற்றுக்கருத்து இரு மாத இதழ்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயண புறம், மதுரை -625 014.
மதுரை : T. சிவக்குமார் – செல்பேசி: 94430 80634
சென்னை : K. கதிரேசன் – செல்பேசி: 98434 64246
Monday, August 16, 2010
ஏழைகளின் பக்கம் யார் இருக்கிறார்கள்?

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சேர்த்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்திய அரசால் முன்பு இயற்றப்பட்ட பல சட்டங்கள் ஒரு சம நிலையை உருவாக்கவே பயன்பட்டன. தொழில் தகராறு சட்டம் மற்றும் பல தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாலர்களுக்கு உரிய உரிமையை வழங்கும் அதே சமயம் முதலீடு செய்யும் தொழில் அதிபர்களையும் பாதிக்கா வண்ணம் இருக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அனைத்தும் இருந்தும் அதனை செயல்படுத்தும் அரசு நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவது ஏன்? என்று பலரும் யோசிப்பதில்லை .
இன்றைய அரசியலில் நிலவும் அவலம்
இன்று ‘நான் ஒரு அரசியல் வாதி’ என்று ஒருவர் அறிமுகப்படுத்தினால் அவரை குறித்து ஒருவித பயம் வருமே தவிர அவர் மீது வெறுப்பே பெரும்பான்மையோருக்கு ஏற்படுகிறது . இது ஏன் ? சுதந்திர போரட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி , கம்யுனிஸ்ட் கட்சி அனைத்துமே பங்கு பெற்று கடுமையாக போராடினர். அவர்களில் பலர் தங்களின் இன்னுயிரை நாட்டின் சுதந்திரத்திற்காக சமர்பித்தனர் அவர்கள் அனைவரும் மக்கள் நலம் பெற்று நல்வாழ்வு வாழவே தங்களின் பொன்னான நேரத்தை , இன்னுயிரை , தாங்கள் பெற்றிருக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை தியாகம் செய்தனர், பணம் படைத் தவர்களில் சிலர் கூட தங்கள் ஒட்டு மொத்த செல்வத்தையும் இழந்து முரட்டு கதராடை உடுத்தி போராடி சிறை சென்று எண்ணில் அடங்காத துன்பத்தில் வாடியதன் விளைவு தான். இன்று நாம்மை நாமே ஆளக்கூடிய சுதந்திரம் நமக்கு கிடைதுள்ளது .
இந்த சுதந்திரத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல , கம்யுனிஸ்ட் கட்சியும் மற்றும் பிற அமைப்புகளின் பல தலைவர்களும் ஏட்டில் எழுதவியலாத பல துன்பங்களை அனுபவித்தனர், என்பது மறுக்கவோன்னாதது. பண்டிட் ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசு தங்களுக்கு விமோசனம் தரும் என்று நம்பினார்கள் நமது இந்திய மக்கள். அதைப்போலவே அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் அப்பழுக்கில்லாமல் மக்களை மையப்படுத்தியே திட்டங்களை தீட்டினர். பல தொழிற்சாலைகளை கொண்டு வந்தனர் , லாபம் அதிகம் ஈட்டாத சில தொழில்களை அரசே எடுத்தும் , ஆரம்பித்தும் நடத்தியது. அனால் இன்று எது போன்ற சூழ்நிலை நிலவுகிறது என்றால் சாதாரண ஏழைகளுக்கு இங்கு எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் வழங்காமல் மறுக்கப்படுகிறது. காங்கிரஸ் அரசோ , பி.ஜே.பி. அரசோ , கம்யூனிஸ்ட் அரசோ, அல்லது பிற எந்த அரசாக இருந்தாலும், வேறு எந்த மாநில கட்சிகளாக இருந்தாலும் இது வரை எந்த ஆட்சி அதிகாரத்தையே நுகராத சிறிய கட்சியாக இருந்தாலும் ஏழை ,அடித்தட்டு மக்களுக்கு நலன் பேணும் எந்தவிதமான அறிவியல் பூர்வமான திட்டங்களையோ , பொது மக்களின் அன்றாட அத்தியாவசியமான கல்வி விசயத்திலோ , மருத்துவ வசதிகளையோ , சிறப்பான போக்குவரத்து வசதிகளையோ விளம்பரம் தேட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லாமல் உண்மையான சமூக அக்கறையோடு செய்து தருவதில்லை. எதிர் கட்சிகளும் எந்தவிதமான ஆக்கபூர்வமான போராட்டங்களையும் நடத்தாமல் நாங்களும் இருக்கிறோம் என்பதிற்காக சில அடையாள பூர்வமான போராடங்களை நடத்துகிறதே தவிர எந்த விதமான ஆக்க பூர்வமான வெகு ஜனங்களுக்கு உபயோகமான எந்தவித போறாட்டங்களையும் முன்னெடுத்து செயல்வதில்லை , என்பதே நிதர்சன உண்மை ஆகும்.
போபாலில் நடந்த பேரவலம்
உதாரணமாக போபாலில் அந்த நிறுவனத்தின் அஜாக்கிரதையின் காரணமாக ஒரு மிகப்பெரிய விபத்து நடைபெற்றது. அதற்குள் நாம் செல்லாவிட்டாலும், அதற்கு பின்பு நடைபெற்றது என்ன? ஜப்பானிலே குண்டு போட்டதை கண்டிக்காத நாடுகளே இல்லை எனலாம், அந்த அளவிற்கு அது இன்று வரை ஹிரோஷிமா தினமாக அனுசரிக்கபடுகிறது. நமது சொந்த நாட்டிலே , சொந்த மக்களை , தங்களின் அதீத லாப வெறிக்காக ஒரு நிறுவனம் செய்த பிழையால் பல்லாயிரக்கனக்கான உயிர்கள் எந்த விதமான நியாமான காரணமும் இல்லாமல் பலி கொடுக்கபட்டது. அதை தட்டி கேட்க கூட முடியாவிட்டால் பரவாயில்லை, குறைந்த பட்சம் அந்த தவறுக்கு தண்டனை பெற்றாவது, கொடுக்க வேண்டாமா நமது இந்திய அரசு. அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும் , அதை பார்க்கும் மக்களுக்கும் எவ்வாறு இந்த இந்திய அரசின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரும், என்பது நகைபிற்க்கு உரியதே.
தமிழகத்தில் உள்ள துயர நிலை
அது மட்டுமா இன்று தேசத்திலே எங்கு திரும்பினாலும் விண்ணை முட்டும் விலை வாசி , மக்கள் நகரங்களில் வாழவே முடியாத அளவிற்கு அதிகபடியான வீட்டு வாடகை உயர்வு , இங்கு மின் சப்லையே இல்லா விட்டாலும் கூட அதிகபடியான மின் கட்டண உயர்வு , அறிவிக்கபடாத பஸ் கட்டண உயர்வு, ஏழை மாணவர்கள் கல்வியே பெற முடியாத அளவிற்கு கல்வி கட்டண உயர்வு , மருத்துவ மனைக்கு போனாலே திரும்பி வர முடியுமா? என்று தெரியாத அளவிற்கு ஆகாயத்தில் நிற்கும் மருத்துவ கட்டணங்கள் , இன்று வேலைக்கு அலுவலகம் நுழையும் வரை நாம் வேலையில் இருக்கிறோமா என்பது நிச்சயமில்லை, அந்த வேலையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அளவிற்கு கொடுமையானது என்பது இன்னொரு பக்க முள்ள உண்மையே.
எதிர் கட்சிகளின் அறிக்கை அரசியல் அக்கப்போர்
இவ்வாறு ஏழை மக்கள் பல வழிகளிலும் எண்ணிலடங்காத வேதனையோடு வாணலியில் வறுபடும் புழுவை போல துடிக்கின்றனர். நடு இரவில் மின்சாரம் இல்லாமல் தூக்கம் இழந்து அவதியுறுகின்றனர் . இந்த சாதாரண அடித்தட்டு மக்கள் தாங்கள் படும் , மற்றும் படப்போகும் துன்பங்களுக்காக , தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை பேச யாராவது , எந்த அரசியல் கட்சியாவது முன்வராதா என்று ஏங்கி தவிக்கின்றனர். தாங்கள் படும் பிரச்னைகளின் ஒரு பகுதியலவிர்க்காகவாவது பேசும் எதிர் கட்சிகளை ஆதரித்து அவர்களை பூரண விருப்பத்தோடு ஆட்சியில் அமர வைக்கின்றனர் . அனால் திரும்பவும் முதலில் இருந்தே வரலாறு திருப்புகிறது , எந்த எதிர் கட்சி இவர்களுக்காக குரல் கொடுத்ததோ அதே கட்சியானது ஆளும் கட்சியான பின்பு அந்த முந்தய ஆட்சியாளர்களின் தவறையே திரும்பவும் செய்கிறது. மீண்டும் ஒருமுறை வரலாறு திரும்புகிறது. பல ஜாதிக்கட்சிகளும் அந்த ஜாதியிலையே உள்ள ஏழைகளின் எண்ணி பார்க்கவியலாத துன்பகளுக்கு எதிராக போராட முன் வருவதில்லை . இவற்றிக்கு எல்லாம் தீர்வு தான் என்ன 64 வது சுதந்திர தினம் கொண்டாடினாலும் , அந்த சுதந்திரமானது அனைவருக்கும் கிடைத்து உள்ளதா என்றால் அது ஒரு மிக பெரிய கேள்வி குறியாகத்தான் இன்று எழுந்து நிற்கிறது.
அரசியலே ஒரு தொழில் ஆகி போன சூழ்நிலை
இன்றைய அரசியல் என்பதே முதலீடு செய்து அதில் லாபம் ஈட்டும் லாபகரமான தொழிலாக உருமாறிவிட்டது , எம்.பி. பதவியும் , எம்.எல்.ஏ. பதவியும் இன்று பணம் உள்ளவர்களுக்கு விலை பேசி விற்கப்படுகிறது . இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் எந்த நாட்டிலும் நடக்காத அளவிற்கு மிகப்பெரிய ஊழல் நடந்தது இப்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவிற்கு உலக அளவில் மிகப்பெரிய தலைகுனிவை, ஏற்படுத்தும் மிகப்பெரிய தேச அவமானம் ஆகும். அண்மையில் கிரிகெட் போட்டிகளில் நடந்த பேரமும், முறைகேடுகளும் சந்தி சிரித்தது. தியாகி பகத் சிங்க் போன்றவர்கள் கனவு கண்ட சுதந்திர இந்தியாவில், இது போன்ற நிகழ்வுகளை அனுமதிப்பது என்பது நமது தேச சுதந்திரத்திர்க்காக பாடுபட்ட, உயிர்கொடுத்த , அனைத்து தியாகிகளையும் அவமதிப்பதாகும் .
மேசியா வருவாரா, மீட்சி தருவாரா ?
இன்று பெருக்கெடுத்து ஓடும் நுகர்வு கலாச்சாரம் நம் அனைவறையும் அதில் தள்ளி நாம் அதில் இழுத்து செல்லப்பட்டு கொண்டு இருக்கிறோம் . சாதாரண மக்களின் பிள்ளைகள் நல்ல கல்வியை பெற முடியாமல் போதையிலும், வேலையில்லாத சூழ்நிலையிலும் , போதைக்கு அடிமையாகியும் அவர்களுக்குள்ளேவெறி வாதம் தூண்டப்பட்டு வன்முறை அமைப்புகளின் கைபாவைகளாகி, அதிலும் ஹிந்து வெறிவாத அமைப்புகளிடம் சிக்கி தாங்களும் அழிவதோடு , தங்களை சேர்ந்த இன மக்களையும் அளிக்கும் சூழ்நிலைக்கு தள்ள பட்டு உள்ளனர் . காஷ்மீர் மாநிலத்திலே எந்த பெரிய கட்சியும் இந்திய அரசை எதிர்த்து போராடாத காரணத்தால் தாங்களே ராணுவத்திற்கு எதிராக கல் எறிவது போன்ற செயல்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டி உள்ளது, அந்த அளவிற்கு ஏழை மக்களுக்காக போராடும் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் உள்ளது. இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன ? பகத் சிங்க் ,நேதாஜி போன்றவர்கள் கற்றுக்கொடுத்த போராட்டவழிமுறைகள் எல்லாம் என்னவாயிற்று .ஏழை மக்கள் நாதி அற்று போய் விட்டார்களா . இன்று இருபதெல்லாம் அவர்கள் சொன்னதற்கு நேர் எதிரானதாகவே அல்லவா நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அதன் விளைவே லஞ்சமும், ஊ ழலும் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று ஏழைகளுக்காகவும் , ஒடுக்கப்படவர்களுக்காகவும் குரல் கொடுத்து அவர்களை மையப்படுத்தி கட்சி அமைத்து ஆடம்பரம் தவிர்த்து 'உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்' என்று உறுதி கொடுக்க கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்.இன்றைய ஏழை இந்திய மக்கள் தங்களுக்காக அரசியல் நடத்த ஒரு மேசியாவை எதிர் நோக்கி காத்து கிடக்கிறார்கள். அந்த மேசியா வருவாரா இவர்களுக்கு விமோசனம் தருவாரா? எந்த மெசியாவும் விண்ணில் இருந்து வர போவதில்லை . ஏழை மக்கள் தாங்கள் படும் துன்பத்திற்கு யார் காரணம் என்று புரிந்து கொண்டு, யார் எதிரி என்று தெரிந்து கொண்டு, எந்த வகையான போராட்டம் தங்களுக்கு ஏற்றது என்று ஆராயுந்து, தெளிவான குறி கோலுடன் போராடினால் தவிர அவர்கள் படும் துன்பத்திற்கு இந்த 64 வது சுதந்திர தினம் அதுவும் ஒரு நாளே தவிர நமக்கான நாளாக அது இருக்காது . நம்மிடம் இழப்பதற்கு அடிமை சங்கிலி தவிர வேறு ஒன்றும் இல்லை அனால் நாம் பெறுவதற்கு பொன்னுலகமே இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்துவோம். போராடுவோம். வெற்றியடைவோம்.
Friday, July 23, 2010
கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடை (CWP)
நமது நாட்டின் சமூக அமைப்பு முதலாளித்துவம் ஆகும். இங்கு நிலவுவது முதலாளித்துவ லாப நோக்கப் பொருளாதாரம். லாப நோக்கம் உழைப்பவரையும் நாட்டின் வளங்களையும் சுரண்டி தனியார் கொழுக்க வழிவகுத்துக் கொடுக்கிறது. அதிக எண்ணிக்கையில் நமது நாட்டில் உழைப்பாளர் இருப்பது மிகக் குறைந்த கூலி கொடுத்து சுரண்ட முதலாளிகளுக்கு வாய்ப்பு வசதியை ஏற்படுத்தித் தருகிறது, சுரண்டலின் விளைவாக சமூகத்தின் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்படுகிறது. அது முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தித் தேக்க நெருக்கடியினை தோற்றுவிக்கிறது.
நமது நாட்டின் அரசு இந்த முதலாளித்துவத்தின் நலன்களுக்காக அடிப்படையில் இருக்கக்கூடிய அரசு. அது உருவாக்கும் திட்டங்கள், கொள்கைகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் உதவுபவையே. மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்படுவதால் உற்பத்திப் பொருள் விற்பனை குறைந்து ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளே உற்பத்தியை முழுவீச்சில் தொடரமுடியாமல் திணறுகின்றன, இந்நிலையில் குன்றி வரும் முதலீட்டு வாய்ப்புகளை எப்படியாவது முதலாளிகளுக்கு ஏற்படுத்தி தருவதும் அரசின் பணியாக உள்ளது. நெருக்கடியின் சுமை முழுவதையும் உழைக்கும் மக்கள் மீது முதலாளித்துவம் சுமத்துகிறது. அதனை எதிர்த்து கிளம்பும் உழைக்கும் மக்கள் இயக்கங்களை நசுக்குவதும் திசை திருப்புவதும் முதலாளித்துவ அரசின் முக்கிய பணிகளாக உள்ளன.
முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக பொதுநல அரசு என்ற பாவனையில் அரசு அதன் கைவசம் வைத்திருந்த பொது சுகாதாரம், கல்வி போன்றவற்றையும் கூட தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கிறது. உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்து பெரும் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு மானியமாக வழங்குகிறது . அதைக் கொண்டே உழைக்கும் வர்க்க இயக்கத்தை நசுக்கப் பயன்படும் அடக்குமுறை கருவிகளை மென்மேலும் வலிமைப்படுத்துகிறது.
முதலாளித்துவ நெருக்கடி முற்றிவரும் இன்றைய நிலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஜனநாயக உரிமைகள் பலவும் பறிபோய்க் கொண்டுள்ளன. அமைப்பு வெகு வேகமாக பாசிசத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.
இவ்வாறு மக்கள் சந்தித்து கொண்டுள்ள பிரச்னைகள் அனைத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கக் கூடிய முதலாளித்துவத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி உழைக்கும் மக்களின் நலன் பேணும் சோசலிச அமைப்பை நிறுவுவது உணர்வு பெற்ற உழைக்கும் மக்கள் இன்றைய நிலையில் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையாகும். அந்த முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச சமூக மாற்றத்தை அடிப்படை அரசியல் வழியாகக் கொண்டு உண்மையான சமூக மாற்ற சக்திகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து சமூக மாற்றத் திசைவழியில் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதே கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடை (
கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டு பொது மேடை
COMMUNIST WORKERS PLATFORM (for action) [
தொடர்புக்கு:
மதுரை : T. சிவக்குமார் – செல்பேசி: 94430 80634
சென்னை : K.கதிரேசன் -- செல்பேசி: 98434 64246
படியுங்கள்